திமுக MLA தியேட்டரில் தீண்டாமை? நரிக்குறவ இன மக்களுக்கு டிக்கெட் வழங்க மறுத்ததாக புகார்!!

 
Idream

சென்னை ஐட்ரீம் திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில், திமுக எம்எல்ஏ மூர்த்திக்கு சொந்தமான ஐ-ட்ரீம் திரையரங்கம் இயங்கி வருகிறது. இந்த திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தை பார்க்க தங்களது குடும்பத்துடன் நரிக்குறவர் இன மக்கள் டிக்கெட் கவுண்டரில் சென்று 7 டிக்கெட் தருமாறு கேட்டுள்ளனர். 

அப்போது பணியில் இருந்த ஊழியர், 4 டிக்கெட் மட்டுமே இருப்பதாகவும் ஒரு டிக்கெட்டின் விலை 100 ரூபாய் எனவும் சீட்டுகள் தனித்தனியாகவுள்ளது என்று கூறி அவர்களுக்கு டிக்கெட் தர மறுத்துள்ளார்கள். இதனால் அந்த பழங்குடியினர் திரையரங்கை விட்டு வெளியேறியுள்ளனர்.

iDream

இதனை கவனித்து கொண்டிருந்த செய்தியாளர், உண்மை நிலையை அறிவதற்காக தனக்கு டிக்கெட் வழங்குமாறு கேட்டபோது அவருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், நரிக்குறவ சமூக மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதையடுத்து, அந்த செய்தியாளர், தாம் வாங்கிய 7 டிக்கெட்களை நரிக்குறவ சமூக மக்களிடம் வழங்கினார்.

முன்னதாக, சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ‘பத்து தல’ படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை திரையரங்க ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர். டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டது மிகப் பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுத்தது. திரையரங்க நிர்வாகிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்நிலையில், சென்னை ஐட்ரீம் திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web