பணத்தைக் காட்டும் ஒன்றிய அமைச்சர்! பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!!

கல்விக்கான 2 ஆயிரத்து 150 கோடி ரூபாய் நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பிரதமரிடமிருந்து இன்னும் பதில் வராத நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அனுப்பியுள்ளார். அதில் 2 ஆயிரத்து 150 கோடி ரூபாய் அல்ல 5 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டியதுள்ளது. தமிழ்நாடு தான் கல்வியில் சிறந்த மாநிலமாக முன்னுதாரணமாக விளங்குகிறது. நீங்கள் ஏன் பிடிவாதம் பிடித்து அரசியல் ஆக்குகிறீர்கள் என்ற தொனியில் பதில் எழுதியுள்ளார்.
நேற்று கடலூர் மாவட்டத்தில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். நீங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் தந்தாலும் நாங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கையே என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், எங்களுக்கு வரவேண்டிய நிதியை, தராமல் மிரட்டும் ஒன்றிய அரசுக்கு நாங்கள் வரி தர மாட்டோம் என்று சொல்ல ஒரு நொடி போதும். ஆனால் கொடுத்து வாங்குவது தான் கூட்டாட்சியின் தத்துவம். அரசியலமைப்பின் இந்த விதியை புரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் ஆட்சியில் இருக்கிறார்கள் என்று மிகவும் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
நிதானமாகப் பேசக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உச்சபட்சக் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது ஒன்றிய அமைச்சரின் கடிதம் என்றே தெரிகிறது. சொன்னதோடு மட்டுமல்லாமல், ஒன்றிய அரசுக்கு வரிகொடா இயக்கத்தை சட்டப்படி செய்ய முடியுமா? அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு என்னென்ன ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று முதலமைச்சர் தரப்பில் ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தனித்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.