உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியா? மு.க ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

 
MKS

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படப்போவதாக எழும் பேச்சுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அந்த வகையில், 8 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 3 கோடியே 25 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சென்னை துவக்கப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, “அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் வாய்ப்பு இருக்கிறதா?” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது. ஆனால் அந்தக் கோரிக்கை இன்னும் பழுக்கவில்லை” என பதில் அளித்தார்.

MKS

அதேபோல், “பருவமழை நேரத்தில் மழைப்பொழிவு எந்த அளவு இருந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு மட்டுமே தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் கூறுகின்றனர்” என்றார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் 22-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்  எனவும், அப்போது  உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் எனவும் பேச்சு அடிபட்டது. 

Udhay

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அளித்து இருக்க கூடிய பேட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி இப்போதைக்கு இல்லை என்பதை சூசகமாக குறிப்பிடுவது போல அமைந்துள்ளது. 

From around the web