குளத்தில் இறந்த நிலையில் கிடந்த 2 வயது குழந்தை.. சென்னையில் பரபரப்பு

 
Chennai

மேடவாக்கத்தில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மேடவாக்கம் காந்திநகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி அபிநயா. இந்த தம்பதிக்கு 2 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இன்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன்ஷிகாவை திடீரென காணவில்லை.

baby

இதையடுத்து அவரது தாயார் அபிநயா தேடிப் பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குழந்தை தன்ஷிகா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை தன்ஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Pallikaranai-PS

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழந்தை தவறி குளத்தில் விழுந்து உயிரிழந்ததா அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டார்களா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web