இரண்டு கைகள் நான்கானால்... மதுரையில் அண்ணன் வீட்டில் முதலமைச்சருக்கு விருந்து!!

ஜுன் 1ம் தேதி மதுரையில் திமுகவின் 75வது பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. பகுதிச் செயலாளார் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரையிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி செய்து வருகிறார்.
மதுரைக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுன்னு அண்ணன் மு.க.அழகிரி வீட்டில் பிரம்மாண்டமான விருந்து தயாராகிறது. அண்ணன் வீட்டிலிருந்து புறப்பட்டு சாலையில் மக்களைச் சந்தித்துக் கொண்டே சென்று முன்னாள் மேயர் முத்து வின் உருவச் சிலையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். உடன் அவருடைய அண்ணன் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரியும் கலந்து கொள்கிறார்.
கட்சியிலிருந்து விலகியிருந்த அழகிரியின் ஆதரவாளர்களுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. முதலமைச்சரின் மதுரை வருகை குறித்து மு.க.அழகிரி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுரை முன்னாள் மேயர் முத்து திமுக வளர்ச்சிக்காக செய்த பணிகளை பாராட்டியவர், தம்பி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
78 வயது ஆகிவிட்ட நிலையில், மீண்டும் கட்சியில் பொறுப்பேற்க விரும்பாமல் தன் ஆதரவாளர்களுக்கு மட்டும் பொறுப்புகள் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மட்டும் முன்னெடுத்துள்ளார் மு.க.அழகிரி. அதே வேளையில் 2026 தேர்தலில் தம்பியுடன் கை கோர்த்து தென் மாவட்டங்களில் தேர்தல் பணிகளை முடுக்கி விடவும் தயராக இருக்கிறாராம் அழகிரி.
அண்ணன் தம்பி இருவரும் கரம் கோர்த்து 2026 தேர்தலில் திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான பணிகளைத் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது.