கோவையில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் பரிதாப பலி.. பூங்காவில் விளையாடிய போது பரிதாபம்!
கோவையில் குடியிருப்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி சின்னவேடம்பட்டி துடியலூர் ரோடு ராமன் விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் அங்குள்ள குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடுவது வழக்கம். இதற்காக அங்கு ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த பூங்காவில் நேற்று மாலை 6.45 மணி அளவில் அங்கு வசிக்கும் பிரசாந்த் ரெட்டி மகன் ஜியான்ஸ் ரெட்டி (6), பாலசந்தர் மகள் வியோமா பிரியா (8) ஆகிய இருவரும் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள சறுக்கில் 2 பேரும் விளையாடியதாக தெரிகிறது. இவர்களுக்கு அருகே மற்ற குழந்தைகளும் விளையாடி கொண்டிருந்தனர்.
சறுக்கில் ஏறி, இறங்கி சந்தோஷமாக விளையாடி கொண்டிருந்த வியோமா பிரியா, ஜியான்ஸ் ரெட்டி ஆகிய இருவரும் திடீரென மின்சாரம் தாக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். இதை அங்கிருந்த குழந்தைகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தன. மேலும் அவர்களின் பெற்றோரிடம் ஓடி சென்று தெரிவித்தன.
அவர்கள் உடனடியாக ஓடி வந்து மயங்கி கிடந்த ஜியான்ஸ் ரெட்டி, வியோமா பிரியா ஆகிய இருவரையும் தூக்கி கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகள் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த குழந்தைகளின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பூங்காவில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு சறுக்கில் விளையாடியபோது அதில் மின்சாரம் பாய்ந்து இருந்ததால் சிறுவர்கள் இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.