குட்டையில் குளிக்க சென்ற 2 குழந்தைகள் பரிதாப பலி.. ராணிப்பேட்டையில் சோகம்!
ராணிப்பேட்டை அருகே குட்டையில் மூழ்கி அண்ணன் - தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னை ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். கூலித்தொழிலாளியான இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் பரமசிவத்தின் 3 குழந்தைகளும் அருகில் உள்ள குட்டையில் குளிக்க சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தினேஷ், சுப்ரியா ஆகிய இருவரும் நீரில் மூழ்கியதை கண்ட மூன்றாவது மகன் ரஞ்சித் தன் தந்தையிடம் ஓடி சென்று நடந்ததை கூறி அழைத்து சென்றான். ஆனால் அவர்கள் வருவதற்குள் அண்ணன் - தங்கை இருவரும் நீரில் மூழ்கிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பரமசிவம் கூச்சலிட்டு கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கி பலியான அண்ணன் - தங்கையை பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெமிலி போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி அண்ணன்-தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.