கோவில் கொடை விழாவில் சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை.. நெல்லையில் பயங்கரம்!
நெல்லை அருகே கோவில் கொடை விழாவில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காரம்பாடு கிராமத்தில் ஓடைக்கரை சுடலைமாடசாமி கோவில் உள்ளது. கோவிலில் கடந்த 10 நாட்களாக திருவிழா நடந்து வந்த நிலையில் கடைசி நாளான நேற்று இரவு கொடை விழா நடைபெற்றது. கொடை விழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாற நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து எதிர்தரப்பை சேர்ந்த சகோதரர்களை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தவும் செய்துள்ளனர். கத்திக்குத்தில் சகோதரர்கள் மதிராஜா மற்றும் மதியழகன் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்து விட்டனர். படுகாயம் அடைந்த மற்றொரு சகோதரர் மகேஷ்வரன் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், கொலையாளிகள் ராஜ்குமார், விபின், பருன் என மூன்று பேரை கைது செய்தனர். கொடை விழா குழுவினர் வசிக்கும் திசையன்விளை கக்கன் நகர் பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தியதில் இரட்டை கொலைக்கான காரணம் தெரியவந்தது. திசையன்விளை கக்கன் நகர் பகுதியில் சகோதரர்களான மதிராஜா, மதியழகன், மகேஷ்வரன் ஆகியோர் வசித்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார், விபின், பருன் ஆகியோருக்கு இடையேயும், சகோதரர்களுக்கு இடையேயும் ஏற்கனவே முன்பகை இருந்துள்ளது.
இரு நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாற அருகே இருந்தவர்கள் விலக்கி விட்டுள்ளனர் இந்நிலையில் கோவில் திருவிழாவின்போது அனைவரும் மது போதையில் இருக்க, கரகாட்ட நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது இரு தரப்பை சேர்ந்தவர்களும் அருகருகே அமர்ந்துள்ளனர். அப்போதும் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, ஊர் பெரியவர்கள் விலக்கி விட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜ்குமார், விபின், பருன் ஆகியோர் மீண்டும் மது அருந்திக் கொண்டு, அரிவாள், கத்தியை எடுத்துக் கொண்டு கூட்டத்திற்குள் வந்து, சகோதரர்களான மதிராஜா, மதியழகன், மகேஷ்வரன் ஆகியோரை சரமாரியாக வெட்டி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.