வண்டிய வேங்கைவயலுக்கு திருப்புங்கண்ணா! விஜய் யின் அடுத்த பயணம் ரெடி!!

ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதியாக அறியப்பட்ட தவெக தலைவர் நடிகர் விஜய், அதற்கு பரந்தூர் பயணம் மூலம் முடிவு கட்டினார். மக்கள் கூட்டம் வழக்கமானதாகத் தான் இருந்ததே ஒழிய ஒரு உச்ச நடிகரை காணும் ஆர்வம் அவ்வளவாக இல்லை. ஆனாலும், தவெக கட்சியினருக்கு விஜய் வெளியே வந்தது பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பரந்தூரில் விஜய் பேசிய பிறகு தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டு இருப்பது ,விஜய் க்கான வெற்றியாகவும் கருதப்படுகிறது.
போராடும் மக்களை விஜய் சந்தித்ததால், இந்தப் போராட்டத்திற்கு புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது என்பதுவும் உண்மையே. அதிமுக போட்ட திட்டம் என்றாலும் தற்போது திமுக அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் திட்டத்தில் மாற்றம் வருமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் இந்த நடவடிக்கைகளைக் கண்ட பிறகு விஜய்க்கு உற்சாகம் பிறந்திருப்பதில் ஆச்சரியமில்லை. நீண்டநாட்களாகப் பேசப்படும் பிரச்சனையான வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தை அடுத்து கையில் எடுத்துள்ளார் விஜய். வேங்கைவயலுக்கு பயணம் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சென்சிட்டிவான பிரச்சனை என்பதால் வேங்கைவயல் செல்ல விஜய்க்கு அனுமதி வழங்கப்படுமா? அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. அப்படியே போனாலும் யாரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பார். அரசுக்கு என்ன கோரிக்கை வைப்பார் என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.