லாரி - கார் நேருக்குநேர் மோதல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்
சிதம்பரம் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் ஆணையம்குப்பம் பகுதியில் நேற்று (செப்.12) நள்ளிரவு கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற கார் ஒன்றின் மீது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரங்கிப்பேட்டை போலீசார் உயிரிழந்த ஐந்து பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டு கருப்பூர் பகுதியைச் சேர்ந்த யாசர் ஹராபத் (40), மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது அன்வர் (56), குத்தாலம் நக்கம்பாடி ஸ்ரீ கண்டபுரம் ஹாஜியார் தெருவைச் சேர்ந்த ஹாஜிதா பேகம் (62), திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சராபாத் நிஷா (30) மற்றும் 3 வயது அப்னான் என்ற சிறுவன் என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்பதும், இவர்கள் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாத உறவினரைப் பார்த்துவிட்டு நள்ளிரவு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.முட்லூர் ஆணையம்குப்பம் எனும் இடத்தில் வரும் போது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த லாரி ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் கார் மீது நேருக்கு நேர் மோதியதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருவதாகவும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மற்றும் அதன் கிளீனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில் போலீசார் அவர்களையும் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.