சிவகங்கையில் சிக்கலா? கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கிடையாதா?
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மீண்டும்10 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிடுவாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் கடந்த முறை வெற்றி பெற்றார். அவர் மீது காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அதிருப்தி உள்ளது. ராகுல் காந்தியின் பாத யாத்திரையின் போது நெட்பிளிக்ஸில் பார்த்த சினிமா பற்றி சமூகத்தளங்களில் தெரிவித்து, கட்சியினரின் விமர்சனத்திற்கு ஆளானார்.
மீண்டும் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு இழுபறி ஆகலாம் என்ற அச்சம் காங்கிரஸ் கட்சியினருக்கே உள்ளது.
புதுச்சேரி உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். கூட்டணி பேச்சு வார்த்தையின் போது, அக்கட்சியின் சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது
இது வரையிலும் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த அழகிரி, சொந்த தொகுதியான கடலூரில் போட்டியிட விரும்புகிறார். கே.எஸ்.அழகிரி முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத் தக்கது. கடலூர் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்ற தொகுதி. ஆனால் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மீது கொலைவழக்கு உள்ளதால் மீண்டும் அவரைப் போட்டியிட கட்சித் தலைமை அனுமதிக்காது எனத் தெரிகிறது.
தேனி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்ததால், அதை எடுத்துக் கொண்டு கடலூர் தொகுதியை கொடுக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளதாம். தேனியில் டி டி வி தினகரன் அல்லது ஓ பி எஸ் மகன் போட்டியிடலாம் என்பதால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தங்க தமிழ்ச் செல்வனை களம் இறக்க தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.
சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிட்டால் சுதர்சனம் நாச்சியப்பனுக்கே வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது, அதிரடியாக சிவகங்கை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரே போட்டியிட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் கட்சியினர்.
எப்படி இருந்தாலும் கார்த்தி சிதம்பரத்திற்கு கல்தா உறுதி என்று தெரிகிறது.
-ஸ்கார்ப்பியன்