பள்ளி வளாகத்தில் மரம் வேரோடு சாய்ந்து விபத்து.. 10-ம் வகுப்பு மாணவி பலி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 
thanjavur

தஞ்சாவூர் அருகே பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அடுத்து உள்ள கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி பத்மா. இந்த தம்பதிக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். இவர்களுடைய மூத்த மகள் சுஷ்மிதா (15). இதேபோல், கணபதி கிராமம் தட்டாரத்தெருவை சேர்ந்தவர் கந்தன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (15). இவர்கள் இருவரும் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில், அப்பகுதியில் நேற்று மாலை பள்ளி முடியும் வேளையில் சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. வழக்கம்போல் சுஷ்மிதாவும், ராஜேஸ்வரியும் வீட்டுக்கு செல்ல பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்தனர். அந்த நேரத்தில் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு தூங்கு மூஞ்சி மரம் திடீரென வேரோடு சாய்ந்து சுஷ்மிதா, ராஜேஸ்வரி ஆகியோர் மீது விழுந்தது. இதனால் இருவரும் மரத்தின் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

Thanjavur

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியைகள், 2 மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுஷ்மிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் திடீரென அய்யம்பேட்டை அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் (பொறுப்பு) முருககுமார், வருவாய் ஆய்வாளர் ரெஜிலா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜ்குமார், முகமது முபாரக் அலி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலெட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், வைரவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

MKS

அப்போது அதிககாரிகள் நாளை (இன்று) அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் அய்யம்படே்டை பேருராட்சியில் நடத்தப்டும் என்று உறுதி கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பெண்ணின் இறப்பு குறித்து, “சுஷ்மிதா நன்றாகப் படிக்கக் கூடிய மாணவி. நான் படித்து பெரிய ஆளாகி நல்ல வேலைக்குச் சென்று அப்பா, அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி சக தோழிகளிடம் சொல்லிக்கொண்டிருப்பாள் அவளுக்கு இப்படி ஓர் இறப்பு வரும் என யாரும் நினைக்கவில்லை” என பள்ளி தரப்பில் தெரிவித்தனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் சுஷ்மிதா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம், காயமடைந்த ராஜேஷ்வரிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறார்.

From around the web