அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம்.. தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்.. குன்றத்தூரில் நேர்ந்த விபரீதம்!

 
chennai

குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் சக்கரங்களில் சிக்கி சிதைந்த கால்களை அகற்றினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு உள்ளது. இந்த பள்ளியில் குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் இருந்து வீடுகளுக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கம்.

Chennai

இந்த நிலையில் கொல்லச்சேரி நான்கு சாலையில் இருந்து குன்றத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் வந்தனர். அப்போது குன்றத்தூர் தேரடி அருகே வந்தபோது படிக்கட்டில் பயணம் செய்தபடி வந்த மாணவன் சந்தோஷ் தவறி கீழே விழுந்ததில் அவனது காலில் சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் இரண்டு கால்களும் தூண்டானது. இதனை கண்டதும் படியில் தொடங்கி வந்த சக மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் பள்ளி மாணவனின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காயமடைந்த மாணவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், மாணவனின் 2 கால்களை அகற்றினர். தற்போது முதற்கட்ட அறுவை சிகிச்சை மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும், மூட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்து மாணவன் கால்களை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web