கடும் எதிர்ப்பை சந்திக்கும் தவெக திருநர் அணி அறிவிப்பு!!

தவெக உட்கட்சி கட்டமைப்பை உருவாக்கி வருகிறார் தலைவர் நடிகர் விஜய். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். சுற்றுச்சூழல் அணி உட்பட பல்வேறு அணிகளை அறிவித்துள்ளார் விஜய். இதில் ஒன்று திருநர் அணியாகும். இந்த அணிகளின் வரிசைப் பட்டியலில் திருநர் / திருநங்கை அணி 9 வது இடத்தில் உள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் லிவிங் ஸ்மைல் வித்யா. “ இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த “9” என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விசயம். அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா! இதையும் நாங்களே தான் மாரிலும், வயித்திலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ்கூறும் அறிவுஜீவுகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ்!” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் லிவிங் ஸ்மைல் வித்யா
இந்த பதிவை மேற்கோள் காட்டி, ”தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் திருநர்களுக்கான தனி விங் அமைப்பது பாராட்டுக்குரியது அதேவேளை ஒன்பதாவது இடத்தில் பட்டியலிட்டு இருப்பது உங்களை சந்தேகப்பட வைக்கிறது தெரியாமல் நடந்திருந்தால் உடனே திருத்திக் கொள்ளுங்கள்” என்று சமூக செயற்பாட்டாளர் டாக்டர்.சுந்தரவல்லி பதிவிட்டுள்ளார்.
லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு பலத்த ஆதரவு பெருகி வருகிறது. அவருடைய கருத்துக்கு தவெக தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், திருநங்கையர், திருநம்பிகளுக்காக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திட்டங்களையும் சட்டங்களையும் பட்டியலிட்டுள்ளார் வித்யா.