திருநங்கை வெட்டி படுகொலை.. தவறுதலாக ஆளை மாற்றிக் கொன்ற வாலிபர்.. கோவை அருகே பயங்கரம்!

 
Coimbatore

கோவையில் திருநங்கையை வாலிபர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி என்கிற சோமசுந்தரம் (37). திருநங்கையான இவர், ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கோவை வடவள்ளி அடுத்துள்ள மருதமலை இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் மாசிலாமணி (33) என்ற திருநங்கை வீட்டிற்கு அடிக்கடி இவர் வந்து சென்றுள்ளார். மாசிலாமணி உடன் தங்கியிருந்த மணி மற்றும் தனலட்சுமி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் மாசிலாமணியும் அவரது நண்பர் மணிகண்டன் என்பவரும் வீட்டிற்கு வெளியே வந்த போது வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை தள்ளி நிறுத்துமாறு கூறியபோது காரில் இருந்த தினேஷ் என்கிற தினேஷ் கந்தசாமி என்பவரோடு சிறு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ், மாசிலாமணி மீது கடும் கோபத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 30-ம் தேதியன்று மாசிலாமணி வீட்டிற்கு தனலட்சுமி வருகை தந்துள்ளார். சிறிது நேரத்தில் மாசிலாமணியும், மணியும் மாலை 4 மணி அளவில் வெளியே சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தனலட்சுமி உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

murder

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தினேஷுடனான அவர்களது தகராறு குறித்து தெரியவந்தது. இதையடுத்து அதே பகுதியில் சுற்றி திரிந்த தினேஷை பிடித்து விசாரித்தபோது, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தகராறின் போது தனது தந்தையின் முன்னிலையில் தன்னை மாசிலாமணி திட்டியதால் அவமானம் அடைந்த தினேஷ், மாசிலாமணியை பழி தீர்ப்பதற்காக திட்டங்களை தீட்டி உள்ளார்.

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து கோவைக்கு விமான மூலமாக வருகை தந்துள்ளார். மாசிலாமணியை கொலை செய்வதற்காக இரண்டு கத்திகளை வாங்கி வைத்துக் கொண்டு அவரது வீட்டின் அருகே நோட்டமிட்டு சுற்றித்திரிந்து உள்ளார்.

Vadavalli

ஒருமுறை மாசிலாமணியின் வீட்டில் யாரும் இல்லாத போது, உள்ளே சென்று கத்திகளை அங்கே மறைத்து வைத்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். கடந்த 29ம் தேதி மீண்டும் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தினேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்திகளை எடுத்துக் கொண்டு மாசிலாமணி வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு படுத்து உறங்கிக் கொண்டிருந்த திருநங்கை தனலட்சுமியை, மாசிலாமணி என நினைத்து சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற தினேஷ், மொட்டை அடித்துக் கொண்டு மதுரைக்கு சென்றது தெரியவந்தது.

பின்னர் தவறாக தனலட்சுமியை கொலை செய்தது தெரியவந்ததால் மீண்டும் மாசிலாமணியை கொலை செய்வதற்காக மருதமலைக்கு வந்த போது, நேற்று போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web