சோகம்! தாறுமாறாக ஓடிய கார்... பள்ளி மாணவர்கள் மீது மோதி விபத்து... 3 மாணவர்கள் பலி!!

 
Vaniyampadi

வாணியம்பாடி அருகே வலையம்பட்டியில் கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் கிரி சமுத்திரதத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் சைக்கிளில் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல 8-ம் வகுப்பு மாணவர்கள் வெற்றி (13), விஜய் (13), சபிக் (13) ஆகியோர் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி அதிவேகமாக வந்த கார் பள்ளி மாணவர்கள் மீது மோதி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், மாணவர்கள் 3 பேர் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Accident

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அலறி கூச்சலிட்ட படியே கதறினர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவருவதற்குள் விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓட்டுநர் உள்பட 2 பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெற்றோர்கள் உயிரிழந்த தனது பிள்ளைகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். 

இதனையடுத்து, இந்த விபத்தை கண்டித்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Vaniyampadi

இதனையடுத்து. போலீசார் விபத்தில் பலியான மாணவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web