சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தண்ணீர் வடியத்தொடங்கியதால் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
திண்டிவனத்திற்கும் உளுந்தூர்பேட்டைக்கும் இடையே அரசூர், இருவேல்பட்டு ஆகிய ஊர்களில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைப்பட்டது.
சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்கு, திண்டிவனத்திலிருந்து மாற்றுப் பாதையை அரசு பரிந்துரைத்து இருந்தது. செஞ்சி, திருவண்ணாமலை திருக்கோயிலூர், ஆசனூர் வழியாக திருச்சி நெடுஞ்சாலைக்கு வாகனங்கள் மாற்றி விடப்பட்டன. மறுவழியிலும் இதே பாதையில் திண்டிவனம் வந்து சென்னைக்கு வாகனங்கள் சென்றன.
தற்போது மழை வெள்ளம் வடிந்துள்ள நிலையில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலை வழக்கமான பாதையில் போக்குவரத்து சீரடைந்துள்ளது.