நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.. சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு!!

 
Traffic

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக கோடம்பாக்கத்தில் நாளை முதல் வரும் 12ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் சேவைக்காக 3 வழித்தடங்களில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 119 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோடம்பாக்கத்தில் நாளை (மே 6) முதல் வரும் 12-ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Traffic

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், “கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் நேராக டாக்டர் அம்பேத்கர் சாலைக்கு ஆற்காடு சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை, ரங்கராஜபுரம் பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம். 

வடபழனியில் இருந்து ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம். யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலையில் ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Traffic

விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை, 2-வது குறுக்கு தெரு மற்றும் 2-வது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம். விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் தியாகராயநகர் செல்ல ஸ்டேஷன் வியூ சாலை மற்றும் பசுல்லா மேம்பாலம் வழியாக சென்று இலக்கை அடையலாம்.

டாக்டர் அம்பேத்கர் சாலையில் ஒரு வழி பாதை ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து 2-வது அவென்யூ வரை தற்போது அமலில் உள்ளது. மேற்கண்ட சாலையில் ரத்தினம்மாள் தெரு சந்திப்பில் இருந்து ஆற்காடு சாலை சந்திப்பு வரை இருவழி பாதையாக மாற்றப்படுகிறது. ரத்தினம்மாள் தெருவில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சாலை, கார்ப்பரேசன் காலனி சாலை மற்றும் பாளையக்காரன் தெரு வழியாக ஆற்காடு சாலைக்கு சென்று அவர்கள் இலக்கை அடையலாம். இந்த நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web