அளவுக்கு அதிகமான போதை மருந்து.. உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவர்.. சென்னையில் பரபரப்பு
சென்னையில் அளவுக்கு அதிகமான போதை ஊசி செலுத்திக் கொண்ட கல்லூரி மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (19). இவர் ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சஞ்சய் தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் ஸ்ரீராம், தனுஷ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து கே.கே.நகரில் உள்ள CPWD குடியிருப்பு மைதானத்தில் அமர்ந்து போதை ஊசியை நரம்பில் செலுத்தி உள்ளனர்.
இதில் சஞ்சய் அளவுக்கு அதிகமான போதை ஊசியை செலுத்திக் கொண்டதாக தெரிகிறது. இதனால் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு சஞ்சய் மயங்கி விழுந்தார். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த கே.கே.நகர் போலீசார் மாணவன் சஞ்சயை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சஞ்சய்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சஞ்சய் தனது நண்பர்களான கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஸ்ரீராம், தரமணி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தனுஷ் மற்றும் பெருங்குடி பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்திக் கொண்டது தெரியவந்தது.
குறிப்பாக கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவா தனுஷ் என்பவரிடம் இருந்து இந்த போதை மாத்திரைகளை வாங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் தலைமறைவான சிவா தனுஷை தேடி வருகின்றனர். மேலும் தனுஷின் இரு சக்கர வாகனத்தில் இருந்து ஐந்து அட்டை டைடல் மற்றும் நைட்ரோவிட் மாத்திரைகள், ஒரு சிறிய எடை கருவியை பறிமுதல் செய்தனர்.
மேலும் சஞ்சய் நண்பர்களான இரு கல்லூரி மாணவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே வியாசர்பாடி மற்றும் அண்ணாமலை பகுதியில் இரு இளைஞர்கள் போதை ஊசி செலுத்தி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.