வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. ரூ.100ஐ நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சி!

 
Tomato

தக்காளி வரத்து குறைந்ததால் ஒரு கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வருகின்றது. அண்டை மாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் (ஜூன்) ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை ஆனது. வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.100-ஐ தாண்டியும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் விலை சற்று குறைந்து, இந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.30 முதல் 40 வரை விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது.

Tomato

இந்த நிலையில் நேற்று தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து காணப்பட்டது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்து இருந்தது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை ஆனது. சில்லரை கடைகள் மற்றும் வெளி மார்க்கெட்டுகளில் ரூ.70 முதல் ரூ.90 வரையும் விற்பனை செய்யப்பட்டதையும், சில இடங்களில் ரூ.100-க்கும் விற்பனையானது.

தக்காளி விலையை போல பச்சை மிளகாய் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விற்கப்பட்ட மிளகாய், நேற்று கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை அதிகரித்து, ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்பட்டது. இதேபோல், கேரட், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து இருந்தது. 

Koyambedu Market

தக்காளி வரத்து இருக்கக் கூடிய கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து வெகுவாக குறைந்து இருப்பதால், விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இனி வரக்கூடிய நாட்களில் மழை இருக்கும் பட்சத்தில், தக்காளி விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அவர்கள் கூறினர்.

From around the web