தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 67 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் இந்த சுங்கச் சாவடிகள் செயல்படுகின்றன. அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.
இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992-ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ல் போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாறாக, ஜூன் மாதத்தில் 42 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று (செப். 1) முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் கூறியதாவது, இந்த கட்டணம் உயர்வு 10 சதவீதம் வரை இருக்கும். வாகனத்தின் வகையை பொறுத்து ரூ.5 முதல் ரூ.120 வரை கட்டணம் உயர்வு இருக்கும். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் வாகனங்கள் அதிகமாக செல்வதால் சுங்க கட்டண வருவாய் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகள் 2023-24ம் ஆண்டில் ரூ.4,221 கோடியை வசூலித்துள்ளன. இது 2022-23ம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட ரூ.3,817 கோடியை விட 10 சதவிகிதம் அதிகம். அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் சுங்க கட்டண வருவாய் 5-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.