இன்று 6 மாவட்டத்தில் கனமழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் அலர்ட்!

 
rain

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (செப். 7) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை (செப். 8) முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Rain

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்தது. திருவாரூர், நன்னிலம், ஆண்டிப்பந்தல், கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியதால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாயத்திற்கு போதிய அளவில் நீர் கிடைக்காதிருந்த நிலையில், மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோன்று, திண்டுக்கல் மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை 5 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. திண்டுக்கல் பேருந்து நிலைய பகுதிகள், பழனி சாலை, மற்றும் புறநகர் பகுதிகளான பால கிருஷ்ணாபுரம், சீலப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால், குளிர் சூழல் நிலவியது.

Rain

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. வீராங்குப்பம், கரும்பூர், மலையாம்பட்டு, அரங்கல்துர்கம், சோலூர், பெரியங்குப்பம் பகுதிகளில் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பஜார் பகுதி மற்றும் ஏ கஸ்பா ஆகிய இடங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

From around the web