தனியார் மருத்துவமனையில் தைராய்டு அறுவை சிகிச்சை.. பெண் திடீர் பலி.. திருப்பத்தூரில் பரபரப்பு

 
Tirupathur

ஆம்பூர் அருகே தனியார் மருத்துவமனையில் தைராய்டு அறுவை சிகிச்சை செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தென்னம்பட்டு பகுதியில் வசித்து வருபவர் ஜானகிராமன். இவரது மனைவி வேண்டம்மாள் (42). இவர் தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். இதற்காக ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு தைராய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் வேண்டம்மாளுக்கு மயக்கம் தெளியவில்லை என கூறப்படுகிறது.

dead-body

இதனால் மருத்துவமனை நிர்வாகம் இவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். வேலூருக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வேண்டம்மாள் திடீரென உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Ambur Town PS

இந்த நிலையில் வேண்டம்மாள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேண்டம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web