மும்மொழிக் கொள்கையால் ஒன்றிய அரசுக்கே ஆப்பு... பாஜகவுக்குள் வாக்குவாதம்!! வைரலாகும் ஆடியோ!!

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஒன்றிய அரசின் கல்வி நிதியை வழங்க மாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10 நாட்களாக நாள்தோறும் இந்தித்திணிப்பை எதிர்ப்போம் என்ற தலைப்பில் பல்வேறு கருத்துக்களை எழுதி வந்தார். அதை எக்ஸ் தளத்தில் ஆங்கிலத்தில் பதிவு செய்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்தார். தமிழ்நாடு ஐடி துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் வட இந்திய ஊடகத்திற்கு ஆங்கிலத்தில் கொடுத்த பேட்டியும் வட இந்தியாவில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜனும் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஜி.எஸ்.மணி என்ற வழக்கறிஞருக்கும் இடையே நடந்த உரையாடல் என்று சொல்லப்படும் ஆடியோ சமூகத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
1996ம் ஆண்டு தான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசியக் கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் கட்டாயமாக்க நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு போட்டுள்ளதாகவும் ஜி.ஆர்.மணி கூறுகிறார். கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. வழக்கின் தீர்ப்பு மத்திய அரசுக்கே ஆப்பு ஆகிவிடும் என்று கரு நாகராஜன் வழக்கை திரும்பப் பெறுமாறு கேட்கிறார். ஆனால், ஜி.எஸ்,மணி நான் தலைவரிடம் சொல்லிவிட்டேன், தனிப்பட்ட பொதுநல வழக்கை நடத்தியே தீருவேன் என்று கூறுகிறார்.
பாஜக துணைத் தலைவரே மும்மொழிக் கொள்கையை மாநிலங்களில் கட்டாயப்படுத்த முடியாது என்று வாக்குமூலம் கொடுத்துள்ள இந்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.