மும்மொழிக் கொள்கையும் 2500 கோடி ரூபாய் கல்வி நிதியும்! சட்டத்தை நாடுகிறதா தமிழ்நாடு அரசு?

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத தமிழ்நாட்டிற்கு 2500 கோடி ரூபாய் கல்வி நிதியை வழங்க சட்டத்தில் இடமில்லை என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக அரசியலமைப்புச் சட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்று ஏதும் இருக்கிறதா? பிளாக்மெயில் செய்கிறதா ஒன்றிய பாஜக அரசு என்று காட்டமாக பதிலளித்து இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்தப் பிரச்சனை குறித்து சட்டநடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். ஒன்றிய அமைச்சர் பொதுவெளியில் கூறிய கருத்தே ஒன்றிய அரசுக்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும் சட்டரீதியான நடவடிக்கைகள் 100 சதவீதம் பலனளிக்குமா என்று தமிழ்நாடு அரசு பரிசீலித்த பிறகே சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
அதே வேளையில் பொதுமக்களை ஒன்று திரட்டும் முயற்சியும் நடைபெறுவதாகத் தெரிகிறது. மும்மொழிக் கொள்கை என்று இந்தித்திணிப்பை ஒன்றிய அரசு கையிலெடுத்துள்ளதால், இது இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டமாக உருவாகும் வாய்ப்பும் தெரிகிறது. ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் பிரச்சனையை பெரிதாக்குமா அல்லது சைலண்டாக நிதியை ஒதுக்கி புதிய மொழிப்பிரச்சனை உருவாகாமல் தடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.