ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. பழனி அருகே சோகம்

 
Palani

பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள முல்லை நகர் பகுதியில் வசித்து வந்தவர் இளங்குமரன் (57). இவர் பழனி கான்வென்ட் ரோடு பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி ரேணுகாதேவி (54) அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 

இவர்களின் மகன் வினித் (24) கோயம்புத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகள் தேன்மொழி (17) தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மகன் தனது வீட்டிற்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டபோது யாரும் அழைப்பை ஏற்காத நிலையில் அருகில் உள்ள நண்பருக்கு தொடர்பு கொண்டு தனது வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

dead-body

அப்போது அந்த வீடு உள்ளே தாழிட்டு கொண்டுள்ளது. வெகு நேரமாகியும் யாரும் கதவை திறக்காததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் தாய் மற்றும் மகள் மருந்து குடித்தும், கழுத்தறுபட்டும் இறந்து கிடந்துள்ளனர். மேலும் தந்தையும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பழனி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு தனஞ்செயன், இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Palani Town PS

தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் சம்பவ இடத்துக்கு வந்து, வீட்டை பார்வையிட்டு சென்றார். அதைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web