சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்! காட்டமான கனிமொழி எம்.பி.!
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வந்து கொண்டிருக்கிறது. பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் ஆதரவாளர்களுடன் சீமான் வீட்டுக்குச் சென்றார். போலீசார் தடுத்து நிறுத்தி தடுப்புக்காவலில் வைத்தனர்.
திமுக தரப்பிலிருந்து தமிழன் பிரச்சன்னா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தனர். நீயா நானா கோபிநாத் உள்பட அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் சீமான் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தவாறு உள்ளனர்.
இந்நிலையில் பெயரைக் குறிப்பிடாமல் அதேவேளையில் மிகவும் காட்டமான பதிவு ஒன்றை கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ளார்.
”பகுத்தறிவு - சமத்துவம் - பெண் விடுதலை - அறிவியல் வளர்ச்சி - தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.