இனி இந்த மாணவிகளுக்கும் ரூ.1,000.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
அரசு பள்ளிகளை தொடர்ந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஏழை மாணவிகள் உயர்கல்வி பயில வேண்டும் என்று நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் முக்கியமான திட்டம் புதுமைப்பெண் திட்டம். இந்த திட்டம் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவகிள் மற்றும் தனியார் பள்ளிகளில் Right to Education (RTE)யின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று பின் 9 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெறுவார்கள். இந்த திட்டம் வரும் கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளை தொடர்ந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது, “தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம்’ வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.370 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சமூகநலத்துறை ஆணையர் தமிழ்நாடு அரசுக்கு கருத்துருக்களை அனுப்பினார். அதில், ‘புதுமைப்பெண் திட்டத்தால் தற்போது, 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டித்தால், உயர்கல்வி பயிலும் மாணவிகளின் சதவீதம் அதிகரிக்கும்.
தற்போது, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 49 ஆயிரத்து 664 மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதில், சிறுபான்மையினர் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 23 ஆயிரத்து 560 மாணவிகளும் அடங்குவர். புதுமைப்பெண் திட்டத்தை வரும் கல்வி ஆண்டில் உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிப்பதற்கு கூடுதலாக ரூ.35.37 கோடி ஒதுக்க வேண்டும்’ என்று சமூகநலத்துறை ஆணையர் கருத்துரு வழங்கினார்.
தமிழக அரசு இந்த கருத்துருவை கவனமாக பரிசீலனை செய்து, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவிகளுக்கு, புதுமைப்பெண் திட்டம் நீட்டிக்கப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றால், அதற்கு அரசாணை வெளியிடப்பட வேண்டும். அந்த வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளும் மாதம் 1,000 ரூபாய் பெறுவது உறுதியாகி உள்ளது.