முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கிடையாதாம்... அடித்துச் சொல்லும் நயினார் நாகேந்திரன்!!

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு முழுக்க, முழுக்க ஆன்மிக மாநாடு என்றும், அங்கு அரசியல் இருக்காது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதையடு்த்து ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும், அவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து விட்டதாகவும் கூறி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதற்காக நயினார் நாகேந்திரன் நேற்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக ஆஜரானார். உயர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள்.
‘‘மதுரையில் நடைபெற உள்ள மாநாடு ஆன்மிக மாநாடு அல்ல, அது அரசியல் மாநாடு என்ற திமுகவின் குற்றச்சாட்டை மறுக்கிறேன். மதுரையில் நடைபெறவிருப்பது உண்மையான முருக பக்தர்களின் மாநாடு. சில மாதங்களுக்கு முன்பாக பக்தியே இல்லாதவர்கள் பழநியில் மாநாடு நடத்தினர்.
ஆனால் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு முழுக்க, முழுக்க ஆன்மிக மாநாடு. அங்கு அரசியல் இருக்காது. எந்தவொரு அரசியலும் அங்கு பேசமாட்டோம். இந்த மாநாட்டுக்காக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான முருக பக்தர்கள் மதுரைக்கு வரவுள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை மத்திய அமைச்சர் அமித்ஷா இனி அடிக்கடி தமிழ்நாடு வருவார். தேர்தல் முடிந்தபிறகும் அவர் தமிழ்நாடு வருவார்” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
இந்த மாநாட்டிற்காக விரதம் இருந்து வருவதாகவும் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன். மேலும் பச்சை வேட்டி கட்டிய படியே சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆஜரானார்.