மாநாட்டிற்கு இடம் கொடுக்கல்லியாம்.. இங்கிலீஷ் சீமானாக மாறிய விஜய்!!

 
Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக்குழு சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. பொதுக்குழுவில் பங்கேற்ற நடிகர் விஜய் சீமான் போல் ஆவேசமாக உச்சக்குரலில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி தமிழ்நாடு அரசியலில் ஒரு புதிய பாணியை தொடக்கி வைத்துள்ளார்.

நீதிக்கட்சி முதல் திராவிட இயக்கங்கள் மக்களிடம் நேரடியாகப் பேசிப் பேசியே கொள்கைகளைப் பரப்பி இயக்கத்தை வளர்த்தனர். அந்த முன்னோடித் தலைவர்களின் பேச்சில் ஒரு வசீகரம் இருக்கும் தமிழ் மொழி அவர்களுடைய நாவில் நடனமாடும். கலைஞரின் பேச்சைக் கேட்பதற்காக அதிமுகவினரே முண்டியடித்துக் கொண்டு போனது வாடிக்கையானது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் தனக்கென ஒரு பாணியை வைத்திருந்தார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வரையிலும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மக்களுடன் எளிதாகச் சென்றடையக் கூடிய அளவில் தங்கள் பேச்சுக்களை வடிவமைத்துக் கொண்டுள்ளார்கள். பேசும் பொருள், பேசும் நடை எல்லாமும் மக்களுக்கு நெருக்கமானதாக இருக்கும்.

இவர்களிலிருந்து மாறுபட்டு மிகவும் ஆவேசமாக கையை வானத்தை நோக்கிப் பேசும் ஒரு புதுப்பாணியை கொண்டு வந்தவர் நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆவார். அவரைப்போலவே அவரது கட்சி நிர்வாகிகளும் அதே பாணியை கடைப்பிடித்து வருகின்றனர்.

நேற்று தவெக பொதுக்குழுவில் பேசிய நடிகர் விஜய் யும் சீமானின் பாணியையே கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளார். தேவையில்லாத இடத்தில் எல்லாம் உச்சஸ்தாயில் குரலை உயர்த்தி ஆவேசமாகப் பேசினார். சீமானுக்கும் விஜய்க்கும் என்ன வித்தியாசம் என்றால், விஜய் நிறைய ஆங்கிலச் சொற்களை தன்னுடைய பேச்சில் சேர்த்துப் பேசுகிறார். சில சொற்கள் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டது போல் இருக்கிறது.

தவிர ஆங்கிலக் கவிதையைச் சொல்லி தமிழ்நாட்டில் பேசுவது எல்லாம் வேற லெவல் என அவர் நினைத்திருக்கக் கூடும். அதுலேயும் தப்பு பண்ணி மாட்டிக்கொண்டுள்ளார். ”For men may come and men may go  But I go on forever”  என்ற வரிகள் Alfred, Lord Tennyson என்ற இங்கிலாந்து கவிஞர் எழுதிய The Brook என்ற கவிதையில் உள்ளதாகும். ஆனால் எழுதியவர் பெயரைத் தப்பாகச் சொல்லி சமூகத்தளத்தில் கேலிக்குள்ளாகியுள்ளார் விஜய்.

மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர், மாநாட்டுக்கு இடம் கொடுக்கவில்லை என்று சின்னப்பிள்ளை மாதிரி கத்திப் பேசிக்கொண்டு இருந்தால் எப்படி சார்?

நீங்க நீங்களாகவே உங்கள் சொந்த பாணியில் அமைதியாகவே பேசுங்கள் விஜய். இந்த வெற்றுக் கூச்சல் உங்களை இங்கிலீஷ்  சீமானாக  ஆக்கியுள்ளது என்பதை மறந்து விடவேண்டாம்!! 

நடிகர் விஜய் என்பவர் ஒரு மென்மையான மனிதராகவே தமிழ்நாட்டுக்கு அறிமுகமானவர். இந்தக் காட்டுக்கூச்சல் உங்களுக்கு செட் ஆகல்ல சார்.  இப்படிக் கூச்சல் போட்டுப் பேசிக்கொண்டு இருந்தால் உங்களைப் பிடித்தவர்கள் கூட முகம் சுழித்து விலகிப்போய்விடுவார்கள்!

-ஸ்கார்ப்பியன்