மதுரை கள்ளழகரை பார்க்க வந்த இளைஞர் பலி.. கொலையா? சித்திரை திருவிழாவில் சோகம்!

 
Madurai

மதுரை கள்ளழகரை பார்க்க வந்த சூர்யா ராமராயர் மண்டகப்படி அருகில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடக்கும். மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பார்க்க வந்த மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (23) என்பவர் ராமராயர் மண்டகப்படி அருகில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானாரா? அல்லது கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

madurai

முன்னதாக நேற்று நள்ளிரவு சூர்யா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அதிகாலை 4 மணி அளவில் மதுரை ராமராயர் மண்டகப்படி அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த பகுதியில் அரிவாள்களுடன் வலம் வந்த இளைஞர்கள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது போல் தெரிகிறது. அப்போது அந்த இளைஞர்கள் சூர்யாவையும் அவரது நண்பர்களையும் தாக்கியுள்ளனர்.

அவர்களில் நான்கு பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். அந்த இளைஞர்கள் அதீத போதையில் இருப்பதால் அவர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Police

சூர்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சூர்யாவின் நண்பர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறு சிறு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

From around the web