சென்டர் மீடியனில் சாகசம் செய்த இளைஞன்.. வாலிபர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு!

 
Trichy

திருச்சி கொள்ளிடம் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசியல் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு அமைப்பினர் மோட்டார் பைக் மற்றும் வாகனங்களில் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்த நிலையில் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் நடுவே உள்ள தடுப்பு கட்டையின் மேலே இளைஞர் ஒருவர் மோட்டார் பைக்கை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Kollidam PS

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் குருமூர்த்தி (22) என்பவர்தான் கொள்ளிடம் பாலம் தடுப்புச்சுவரில் அச்சுறுத்தும் வகையில் மொபட்டை ஓட்டியது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து குருமூர்த்தி மீது கொள்ளிடம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

From around the web