மயானத்தில் திடீரென கண்விழித்த இளைஞர்.. உறவினர்கள் அதிர்ச்சி!
மணப்பாறை அருகே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் உயிருடன் திரும்பிய செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து அடுத்து உள்ள பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காமநாயக்கர் மகன் ஆண்டி நாயக்கர் (23). கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஆண்டி உர மருந்தை அருந்தியுள்ளார். அதன் பின்னர் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதிய பண வசதி இல்லை எனக்கூறிய காமநாயக்கர், தன் மகனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் மாற்றம் செய்து தர வலியுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரை செய்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் செயற்கை சுவாச கருவிகளுடன் ஆண்டியை அனுப்பி வைத்துள்ளது.
ஆனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரும்பாத காமநாயக்கன், தனது பொன்னம்பட்டி வீட்டிற்கு தன் மகனை அழைத்து சென்றுள்ளார். அங்கு ஆம்புலன்சில் இருந்து இறக்கப்பட்ட ஆண்டி எந்தவித அசைவும் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக்கண்ட காமநாயக்கர் உள்ளிட்ட உடனிருந்தவர்கள் ஆண்டி உயிரிழந்துவிட்டதாக நினைத்து மயான பகுதியிலேயே வைத்துக்கொண்டு கதறி அழுத்துள்ளனர்.
அப்போது ஆண்டி திடீரென மூச்சுவிட்டு கண் விழித்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மீண்டும் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து ஆண்டியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் உயிருடன் திரும்பிய செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.