இன்ஸ்டாகிராமில் பெண்களை குறிவைத்து கடன் வாங்கி தருவதாக நகைகள் சுருட்டல்.. போலீசில் சிக்கிய இளைஞர்!

 
Instagram

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த மகேஷ் குமார் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்கள் பலரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் சித்ரா (27). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மகேஷ் குமார் என்பவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிமுகமாகியுள்ளார். சித்ராவுக்கு அப்போது பணத்தேவை இருந்ததால் வங்கிகளில் கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்துள்ளார். 

நான் வங்கியில் தான் வேலை செய்கிறேன் உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருகிறேன் என நம்பவைத்துள்ளார். இதனை நம்பிய அந்தப்பெண் 4 சவரன் நகைகள், ரூ.3,00,000 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். நீண்ட நாள்களாகியும் மகேஷ் கடன் வாங்கி தராததால் தான் கொடுத்த பணத்தையும் நகைகளையும் கேட்டுள்ளார். ஆனால் மகேஷ் குமாரோ காலம் தாழ்த்தி வந்துள்ளார். 

Fraud

இந்த நிலையில் மகேஷ் குமார் மீது சந்தேகமடைந்த சித்ரா கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் அந்தப் பெண் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பேரில் கேளம்பாக்கம் மெயின் ரோடு அரசுப்பள்ளி தெரு பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமாரை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. இன்ஸ்டாகிராம் மூலம் யார் யாரெல்லாம் கடன் குறித்த தகவல்களை தேடுகிறார்களோ அவர்களை டார்கெட் செய்துள்ளார். அந்த நபர்களை தொடர்புக்கொண்டு பல வங்கிகளில் வேலை செய்து வருவதாக கூறி நம்ப வைத்து பல பேரிடம் பணத்தை வாங்கியுள்ளார்.

Kodungaiyur PS

சித்ராவை போலவே ப்ரீத்தி என்பவரிடம் 5 சவரன் நகை மற்றும் ரூ. 25 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். இதேபோன்று தனக்குத் தெரிந்த பல பேரிடம் 40 லட்சம் ரூபாய் வரை மகேஷ் குமார் மோசடி செய்து பணம் மற்றும் நகைகளை வாங்கி உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடி செய்த பணத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் பணத்தை இரட்டிப்பாக்கும் தொழிலில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்துள்ளார். மேலும் சில லட்சங்களை தங்கத்தில் முதலீடு செய்து மகேஷ் குமார் நஷ்டம் அடைந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பல பேரிடம் மோசடி செய்த மகேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

From around the web