செப்டிக் டேங்கை சுத்தம் செய்த தொழிலாளி.. விஷவாயு தாக்கி பரிதாப பலி.. சென்னையில் சோகம்!

 
Thirumullaivoyal

ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய உள்ளே இறக்கப்பட்ட தொழிலாளி விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட நடேசன் 3வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அம்பத்தூர் கோவிந்தராஜ் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர் அங்கு சுத்தம் செய்யும் பணிக்காக சென்றார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கேட்டுக் கொண்டதால் அங்கிருந்த செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணிக்கு சுரேஷ் சம்மதித்ததார்.

இதையடுத்து, கழிவு நீர் தொட்டி மூடியை திறந்து ஏணி மூலம் சுரேஷ் உள்ளே இறங்கினார். ஆனால், சில நிமிடங்களில் விஷவாயு தாக்கி தொட்டியின் உள்ளேயே விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கு வெளியே நின்று கொண்டிருந்த அவரது நண்பர் ரமேஷ், சுரேஷை மீட்க முயற்சிக்க அவரும் விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்தார்.

man-hole

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, திருமுல்லைவாயில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தொட்டிக்குள் சிக்கியிருந்த சுரேஷை சடலமாக மீட்டனர். மேலும், விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்த ரமேஷை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த சுரேஷின் உறவினர்கள் கதறி அழுத்தது காண்போரை கண்கலங்க செய்தது. வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என அழைத்து வந்து கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.

Thirumullaivoyal PS

சுரேஷ் இந்த வேலை செய்பவரே அல்ல என்றும், இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டிய தொட்டியை, பணத்தை மிச்சப்படுத்துவதற்காக ஆட்களை வைத்து சுத்தம் செய்துள்ளனர். இதனால்தான் சுரேஷ் இறந்துள்ளார் என அவர்கள் குற்றம் சாட்டினர். தமிழ்நாடு அரசு இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுபோல் மற்றொரு சம்பவம் அரங்கேற கூடாது எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

சுரேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் தங்களது வீடுகளை பூட்டி விட்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டனர். கழிவுநீர் தொட்டி மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால், தடுக்கும் வழிமுறைகள் இன்னும் நடைமுறைக்கு வராததது பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web