குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிய பெண்.. திடீரென பாய்ந்து முட்டி, வெறிபிடித்து விரட்டிய மாடு.. அதிர்ச்சி வீடியோ!

ஆவடிஅருகே வீட்டு வாசலில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கும் போது சாலையில் சுற்றி திரியும் பசுமாடு முட்டி துரத்திய சிசிடிவி வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் சமீப காலமாக சாலைகளில் நடமாடும் மாடுகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அவ்வப்போது ஆய்வுகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்மையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வடக்கு மாட வீதியில் முதியவர் ஒருவரை கிர் ரக காளை ஒன்று முட்டித் தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த 17 மாடுகள் காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இதேபோன்ற சம்பவம் சென்னை ஆவடி அருகே நிகழ்ந்துள்ளது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள பூந்தமல்லி ஃபார்ம்ஸ் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 400 மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன.
இந்த நிலையில் சோராஞ்சேரி கிராமத்தை சுற்றி உள்ள பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை பராமரிக்காமல் தெருக்களில் விடுவதால் அருகில் இருக்கக்கூடிய பூந்தமல்லி ஃபார்ம்ஸ் குடியிருப்பு பகுதியில் நுழைந்த பசுமாடு ஒன்று அந்தப் பகுதியில் கைக்குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்த பெண்மணியை முட்டி துரத்தியது. சுதாரித்துக் கொண்ட பெண்மணி கைக்குழந்தையுடன் அருகில் இருந்த மற்றொரு வீட்டில் புகுந்தார். இந்த சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த அப்பகுதி பொதுமக்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மனிதர்களை முட்டுவது வழக்கம் ஆகிவிட்டதாகவும், அதேபோல் சோராஞ்சேரி கிராமத்தில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் மாடுகளை பராமரிக்க வேண்டும் எனவும், பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் அவர்களிடம் மனு அளித்தும், பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று வேதனைடன் தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் பிரதான கோரிக்கையாக வைத்துள்ளனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் சோராஞ்சேரி பகுதியில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்த பொழுது பசு மாடு முட்டி துரத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.