ரேஷன் கடைகளில் வரப்போகும் மாற்றம்.. பணிகள் தீவிரம்!
ரேஷன் கடைகளில் சரியான முறையில் பொருட்கள் வழங்கவும், முறைகேடுகளை தடுக்கவும் தமிழ்நாடு அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும் ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.
மற்றொருபக்கம் ரேஷன் விநியோகிப்பதில் பல்வேறு முறைகளை அரசு கையாண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பயோமெட்ரிக் முறையாகும். ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது.
இந்ந பயோமெட்ரிக் முறை அடிக்கடி செயலிழந்து விடுவதால் பொருட்கள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. அதனால் அரசு ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
இதற்காக ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு கருவிகள், ரசீது வழங்கும் பிரின்டர் சாதனங்கள் வைக்கும் பணிகளை அடுத்த சில தினங்களில் துவங்க போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அரசு ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ‘பாயின்ட் ஆப் சேல்’ (PoS) எனப்படும் விற்பனை முனையக் கருவிகள் பயன்படுத்தப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.