ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் கொடுக்கவில்லை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 
MKS

மழை, வெள்ள பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் உலக முதலீட்டாளா் மாநாட்டு நடைபெற்றது. இதில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் வியட்னாம் நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் என்ற தனியாா் மின்சார காா் தொழிற்சாலை தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொழுத்திடப்பட்டது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் வின் ஃபாஸ்ட் காா் உற்பத்தி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் அமைந்து இருக்கும் சிப்காட் வளாகத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வின் ஃபாஸ்ட் கார் தொழிற்சாலைக்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 408 ஏக்கா் பரப்பளவில் நிலம் தோ்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வியட்னாம் நாட்டு முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டன.

Thoothukudi

தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர் கூறியதாவது, நாடாளுமன்றத்தின் கர்ஜனை மொழியாக திகழ்கிறார் கனிமொழி. தூத்துக்குடியின் பெண் சிங்கமாக திகழ்கிறார் அமைச்சர் கீதா ஜீவன். தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளின் போது போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன.  

திமுக அரசு எப்போதும் மக்கள் பக்கம் நிற்கும் அரசு. பாதிப்பின் போது பார்வை இடுபவர்கள் நாங்கள் அல்ல; எப்போதும் உங்களுடன் இருப்போம். பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க தேவையான திட்டங்களை தீட்டுவதுதான் திராவிட மாடல் அரசு. நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. கொரோனா தொற்றின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.

MKS

கொரோனாவாக இருந்தாலும், புயல் வெள்ளமாக இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறோம். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்புகளை சரி செய்ய தமிழ்நாடு அரசு ரூ.666 கோடி செலவு செய்துள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் சீரழிந்த சாலைகள் ரூ.342 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மழை, வெள்ள பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை.

தூத்துக்குடியில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். தென் மாவட்டங்களுக்கு பெரிய தொழில் நிறுவனங்கள் கொண்டு வரப்படுகின்றன. தூத்துக்குடி, நெல்லையில் அமையும் புதிய ஆலைகளால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறினார்.

From around the web