இன்னும் 3 நாளில் திருமணம்.. அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்

 
Kallakurichi

கள்ளக்குறிச்சி அருகே திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை தவறி கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் சிவக்குமார் (27). கொத்தனாரான இவருக்கும் கச்சிராயப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வருகிற 12-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு அதற்கான அழைப்பிதழ்களை உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர்.

dead-body

இந்த நிலையில் சிவக்குமார் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் உலகங்காத்தான் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் அரிசி ஆலை அருகே வந்த போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக சிவக்குமார் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது அவர் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Kallakurichi PS

வருகிற 12-ந் தேதி தனக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் உறவினர் வீட்டு்க்கு அழைப்பிதழ் கொடுக்க செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலியான சம்பவம் தச்சூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த சம்பவத்தை அறிந்து பெண் வீ்ட்டாரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

From around the web