வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

 
Erode

ஈரோடு அருகே வகுப்பறையில் ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அந்தோணி ஜெரால்ட் (49). இவர் வழக்கம்போல் நேற்றைய தினம் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

தொடர்ந்து மதிய உணவு அருந்திவிட்டு வகுப்புக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து மற்ற ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவ ஊழியர்கள் பரிசோதனை செய்ததில், அந்தோணி ஜெரால்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

Dead Body

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பர்கூர் போலீசார் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் மறைவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரோடு மாவட்டம் அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் திரு.அந்தோணி ஜெரால்ட் அவர்கள் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.


மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர் பணியேற்று உழைத்த திரு.அந்தோணி ஜெரால்ட் அவர்கள் வகுப்பறையிலேயே தன் கடைசி மூச்சையும் இழந்துள்ளார். அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரின் ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள். அவரின் நினைவைப் போற்றுவார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web