மயங்கி விழுந்து உயிரிழந்த மகன்.. அதிர்ச்சியில் தந்தை பலி.. ஈரோட்டில் சோகம்!

 
Erode

ஈரோடு அருகே மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி கனகதாசர் வீதியை சேர்ந்தவர் மாதேவன் (55). இவர் கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சிக்குதாயம்மா. இந்த தம்பதிக்கு மணிகண்டன் (34), கணேசன் (30) என்று 2 மகன்கள் உள்ளனர். இதில் மணிகண்டன் தாளவாடியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கணேசன் ஆட்டோ டிரைவர்.

இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளனர். மகன்கள் 2 பேர் மீதும் மாதேவன் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மணிகண்டன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு் வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவ்வப்போது மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

HeartAttack

இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் கடைக்கு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை கேட்டு மாதேவன் அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து மணிகண்டன் உடலை வீட்டு முன்பு வைத்து இறுதிச்சடங்குகள் செய்து கொண்டிருந்தனர். அப்போது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர். ஆனால் மகனின் இறப்பை மாதேவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

திடீரென அவர் மாரடைப்பு ஏற்பட்டு் மகன் உடல் முன்பு மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாளவாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு மாதேவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

dead-body

இதையடுத்து அவரது உடல் தாளவாடி கொண்டு் வரப்பட்டது. பின்னர் தந்தை - மகன் உடல்களை அருகருகே வைத்து தகனம் செய்தனர். மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web