இடிந்து விழுந்த அரசுப்பள்ளி கட்டட மேற்கூரை.. மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

 
Cheyyar

செய்யாறு அருகே அரசுப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரையின் பெயர்ந்து விழுந்ததில் 5 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அத்தி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி கட்டடம் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. பின்னர், கனிம வளம் நிதியின் கீழ் 17.32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, கடந்த 6 மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

Cheyyar

இந்த கட்டடத்தில், 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வரும் நிலையில், திடீரென பள்ளி கட்டட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து பள்ளி மாணவர்கள் தலையில் விழுந்துள்ளது. அப்போது கீழே அமர்ந்திருந்த 5 மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Cheyyar

இந்த சம்பவம் குறித்து பேசிய அந்த பகுதி மக்கள், “பள்ளி கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டது. அவசர கதியில் திறந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளி கட்டடத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web