கொட்டி தீர்த்த மழை... நாகையில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து ஒன்றிய குழு ஆய்வு!!

 
Nagai

டெல்டா பகுதிகளில் பருவம் தவறிய மழையால் பயிர் சேதமடைந்த டெல்டா மாவட்டங்களில் நேற்று மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பிவைக்க ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

MKS

அதன்படி சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூருவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழு இன்று டெல்டா மாவட்டங்களில் தங்களது ஆய்வை தொடங்கினர்.

முதற்கட்டமாக இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர். அங்கு கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து கொண்டனர். கொள்முதல் செய்யப்படும் விதம், நாள்தோறும் எவ்வளவு அளவு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற பல்வேறு விவரங்களை பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

அப்போது மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகியது. அதோடு நெல்லின் ஈரப்பதமும் அதிகரித்துள்ளது. தற்போது 19 சதவீதம் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மழையால் ஈரப்பதம் அதைவிட அதிகரித்துள்ளது. எனவே 22 சதவீதம் வரையிலான ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

Nagai

கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000 மூட்டை கொள்முதல் செய்யப்படுவதை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை வாங்கி மத்திய அரசிடம் பேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய குழுவினர் திருக்குவளை தாலுகா கச்சநகரம் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து வலிவலம் உள்ளிட்ட பல்வேறு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்த உள்ளனர்.

நாளை (பிப். 9) திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுகள் அனைத்தையும் முடித்து கொண்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகின்றனர். அதன்பின்னர் வருகிற 13-ந்தேதி டெல்லியில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். அதன்பின்னரே நெல்லின் ஈரப்பத தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web