காலையிலேயே பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை..!
தமிழ்நாட்டில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 101.50 உயர்ந்து ரூ. 1,999.50-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 203 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 1,898-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று நவம்பர் 1-ம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ. 101.50 உயர்ந்து, ரூ.1,999.50-க்கு விற்பனையாகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50-க்கு விற்பனையாகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக் குழுக்களுக்கு இடையேயான போர் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.