அதிவேகமாக வந்த தனியார் பேருந்து... 6-ம் வகுப்பு மாணவன் உடல் நசுங்கி பலி.. கதறித் துடித்த பெற்றோர்!

 
Krishnagiri

போச்சம்பள்ளி அருகே தனியார் பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புலியூர் அடுத்து உள்ள பாப்பானூர் கிராமத்தில் வசித்து வருபவர் நசீர். இவரது மகன் முகமது அலி (11). இவர் அரசம்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல தனது வீட்டில் இருந்து மிதிவண்டியில் முகமது அலி பள்ளிக்குச் சென்றுள்ளார்.

Accident

அப்போது புலியூர் ஏரிக்கரை அருகே வந்த போது பின்னால் வந்த தனியார் பேருந்து முகமது அலி மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே முகமது அலி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் முகமது அலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்ற மகன் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் கேட்டு சம்பவ இடத்திற்க்கு வந்த முகமது அலியின் தாய் கதறி அழுது சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.

Pochampalli PS

மேலும் இந்த ஏரிக்கரை பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதாகவும் இப்பகுதியில் வேகக் கட்டுப்பாட்டு கருவி மற்றும் இரு புறங்களின் தடுப்பு சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web