இந்த இடத்தில் போலீஸ் இருக்காங்க.. ஹெல்மெட் போடுங்கோ.. வாகன ஓட்டிகளுக்கு அலர்ட் கொடுத்த கூகுள் மேப்ஸ்!
சென்னையில் உள்ள ஒரு பிரபலமான போலீஸ் சோதனைச் சாவடியில் போலீசார் இருப்பதைப் பற்றி பயணிகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக கூகுள் மேப்பில் குறிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மக்கள் கூகுள் மேப்ஸ் செயலியை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதாவது அனைத்து இடங்களிலும் இது பயன்படுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். இந்நிலையில் டிராபிக் விதிகளை மீறுபவர்களுக்கு அலர்ட் கொடுக்கும் விதமாகக் கூகுள் மேப்ஸ் பயன்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அடையாளம் தெரியாத நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை எச்சரிப்பதற்காகக் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். அதன்படி வழக்கமாக விதிமீறல் செய்பவர்களைப் பிடிக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபடும் சில இடங்களைக் கூகுள் வரைபடத்தில் குறித்துள்ளனர்.
அதாவது போக்குவரத்து காவலர்கள் தினமும் காலையில் சாலை விதிகளை மீறுபவர்களைத் தடுத்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கமா உள்ளது. குறிப்பாகச் சாலை விதிகள் அதிகமாக மீறப்படும் முக்கியமான பகுதிகளைத் தேர்வு செய்து அங்கு கண்காணிப்பைப் பலப்படுத்துகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் பலர் சிக்கியதும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் நாம் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சாலையில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அலர்ட் கொடுக்க போலீசார் வழக்கமாக செக்கிங்கில் ஈடுபடும் பகுதிகளைக் கூகுள் மேப்பில் குறித்துள்ளனர். அதன்படி கூகுள் வரைபடத்தில் சில இடங்களில் இங்கே போலீஸ் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல போலீஸ் சோதனைச் சாவடியானது கூகுள் மேப்ஸில் அந்த பகுதியில் போலீசார் இருப்பதைப் பற்றி பயணிகளுக்கு எச்சரிக்கும் வகையில் குறிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட இருப்பிடத்தின் ஸ்கிரீன் ஷாட், ஆயிரக்கணக்கானவர்களை லைக் செய்ய வைத்துள்ளது.
“போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்கோ ” என்று சென்னை பீனிக்ஸ் மால் அருகில் இருக்கும் இடம் பெயர். போலீசார் இருப்பதால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ் ஸ்கிரீன்ஷாட் எக்ஸ் பக்கத்தில் ஏறக்குறைய 2 லட்சம் பார்வைகளையும் நூற்றுக்கணக்கான வேடிக்கையான கருத்துகளையும் பெற்றுள்ளது. கருத்துகள் பகுதி பெரும்பாலும் சிரிக்கும் முக ஈமோஜிகளால் நிரப்பப்பட்டது. சிலர் கூகுள் மேப்ஸ் சோதனைச் சாவடியை உருவாக்கிய நபரைப் பாராட்டினர், மற்றவர்கள் வழங்கிய தகவல் சரியானது என்று சான்றளித்தனர்.
Near Phoenix Mall!🤣🤣😭😭 pic.twitter.com/YZYzg7ipNp
— Santhosh Sivan 🍉(inactive era👍🏽) (@santhoshsivan_) July 22, 2024
“அமெரிக்காவில், FM வானொலி நிலையங்கள் உண்மையில் நெடுஞ்சாலை ரோந்து அதிகாரிகளின் இருப்பிடங்களை அறிவிக்கின்றன. இந்த நடைமுறை சிக்கலாகக் காணப்படவில்லை, ஏனெனில் அதிகாரிகள் பொதுவாக விபத்து ஏற்படும் பகுதிகளில் நிறுத்தப்படுகிறார்கள். ஓட்டுநர்களை எச்சரிப்பதன் மூலம், விபத்துகளைக் குறைக்கவும், சாலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது” என்று ஒரு எக்ஸ் பயனர் எழுதினார்.
“அந்நியர்களின் கருணையில் ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்” என்று மற்றொருவர் கேலி செய்தார். “இந்த சமூக சேவையை ஒருபோதும் மறக்க முடியாது” மூன்றாவது எக்ஸ் பயனர் கேலி செய்தார். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போலீசார் சோதனை செய்யும் சக பயணிகளை சமூக அக்கறை கொண்டவர்கள் எச்சரிப்பது இது முதல் முறையல்ல. இந்த மாத தொடக்கத்தில், பெங்களூரில் இருந்து இதே போன்ற கூகுள் மேப்ஸ் ஸ்கிரீன்ஷாட் ஆன்லைனில் வைரலானது.