தவெகவினர் ஒரே பொய்யா சொல்றாங்க.. எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக தேர்தல் பிரச்சார செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலான நிலையில் அதற்கு மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்தார்.
ஆனால், இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் ஆதவ் அர்ஜுனாவை திட்டியதாகவும், எடப்பாடி பழனிசாமியை போனில் அழைத்து விஜய் வருத்தம் தெரிவித்ததாகவும் ஒரு செய்தி பரப்பப்பட்டது.
இந்நிலையில், நடிகர் விஜய் என்னிடம் போனில் பேசவில்லை. ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்துக்கு அவர் பதில் அளித்துவிட்டார். அத்துடன் அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவுடன் சுமுகமான உறவு நீடிக்கிறது. ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என்றும் கூறியுள்ளார்.
மேலும், திமுகதான் தமிழகத்துக்கு துரோகம் செய்தது. அதிமுகவைப் பொருத்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சரி, அவர் மறைவுக்குப் பின்னர் நான் முதல்வராக இருந்தபோதும் சரி, சிறப்பான திட்டங்களை மக்களுக்காக கொண்டுவந்தோம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது.
கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறி நடக்கிறது. ஸ்டாலின் மாடல் ஆட்சிதான் துரோக ஆட்சி. மத்திய அமைச்சரவையில் 16 ஆண்டுகாலம் திமுக இடம் பெற்றிருந்தது. அப்போதே கல்வியை மத்திய அரசு பட்டியலில் இருந்து, மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம், என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
