தூங்கி எழுந்து வெளியே வந்த மூதாட்டி.. மின்கம்பி அறுந்து விழுந்து பலியான சோகம்!

சோழவரம் அருகே மின்சார கம்பி அறுந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்து உள்ள பூதூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கனகா (55). கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்த இவர் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் கனகா வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வீட்டின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து கனகா வீட்டின் முன்பு விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் இதனை யாரும் கவனிக்க வில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை கனகா வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் வீட்டு முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கனகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. போலீசார் பலியான கனகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில நாட்களாக சோழவரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதில் ஏற்கனவே சேதம் அடைந்து இருந்த மின்கம்பி அறுந்து விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த பகுதியில் மின்கம்பத்தில் உள்ள கம்பிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதம் அடைந்த மின்கம்பிகளை ஆய்வு செய்து அதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.