குரூப் 2 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. ஆண்டுதோறும் கால அட்டவணை வெளியிட்டு அதன்படி பல்வேறு நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. அதாவது குரூப் 1, 2, 2 ஏ, குரூப் 4 என பல தேர்வுகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குரூப் 2 தேர்வு முடிவுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், கூடுதலாக 620 காலியிடங்களை நிரப்ப உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான குரூப் 2 தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. அனைத்து பதவிகளுக்காமான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. 11,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி வெளியிடப்பட்டது.
முதல்நிலைத் தேர்வையடுத்து, முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய 2 தாள்களுக்குமான தேர்வு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் 12-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்கின்ற தகவலை டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.
இந்த நிலையில் தற்போது காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 6,033 ஆக அதிகரிக்கபட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை அதிகாரபூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.