அடுத்த அதிர்ச்சி.. திருச்சியில் பரவும் மர்ம காய்ச்சல்.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் பலி!

திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் நரியன் தெருவை சேர்ந்த ராஜ சுகுமார். இவரது மனைவி கனகவல்லி (38) மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக இன்று திருவாரூரில் பயிற்சி பெண் மருத்துவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது குறிப்பிடித்தக்கது.